top of page

The Sacrifice (1986) | விடுபடுதல் | Andrei Tarkovsky


உலகத்தின் துயரத்தை, தனது சொந்த துயரமாக நினைக்கும் ஒரு மனிதன். தனது தியாகத்தின் மூலம் உலகத்தின் துயரத்தைப் போக்க முடியும் என நினைக்கிறான். நினைப்பதோடு இல்லாமல் செய்தும் முடிக்கிறான். அம்மிகப்பெரிய தியாகம் அவனை அத்தினசரி துயரத்தில் இருந்து விடுவிக்கிறது. இறுதியில் அவன் அவனிடமே சரணடைகிறான்.


அடுப்படியில், அம்மா இல்லாத சமயம் பானையில் இருந்து சோறு எடுக்கும் போது தெரியாமல் கீழே கொட்டிய சோற்றுப் பருக்கையின் பழியை அப்பா மேல் போட்டு விடலாமா என ஒரு கணம் யோசிப்பதுண்டு. அண்ணப்பூரணித்தாய் வேண்டுமானால் இதற்காக என்னை தண்டிக்கலாம், எங்கள் ஆச்சி சொல்வது போல நரகத்தின் சாக்கடையில் இப்போது கீழே கொட்டிய சில பருக்கைகளும் என் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கலாம்.


ஆனால் தற்போது இந்த உலகத்தில் யாரும் இதற்காக என்னை தண்டிக்கப் போவதில்லை. இருந்தாலும் என்னுடைய நல்ல பெயரை தியாகம் செய்ய எனக்கு மனம் வரவில்லை. எது செய்தாலும் சுத்தமாக செய்யக் கூடியவன் நான் என்ற பெருமையில் ஓட்டை விழக் கூடாது எனத் தப்பிக்கப் பார்க்கிறேன். ஆனால் எனக்குத் தெரியும் அதுக்கு நான் லாயக்கு இல்லாதவன் என்று. இப்படி உள்ளும் வெளியும் முரணான, சிக்கல் நிறைந்தவை தான் மனித குணங்கள்.

ஆனால் விலைமதிப்பில்லாத விஷயங்களை தியாகம் செய்யும் ஒருவனது எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும். அவற்றைத் திரைக்காட்சிகளாக அமைப்பது எவ்வளவு பெரிய சவால்? அதில் டர்கோவ்ஸ்கி வித்தைக் காரர்.

Sacrfice உம் அவரின் வித்தைகளில் ஒன்று, அதுவும் கடைசி வித்தை.

படம் முழுக்க மனித வாடை அடிக்கிறது. படத்தில் காட்டப் படும் பல சூழ்நிலைகளை என்னால் நிஜ வாழ்வில் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாததாகத் தான் இருக்கிறது ஆனாலும் அம்மனிதர்களை முழுதாக உணர முடிகிறது. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனிப்பட்ட கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை ருசிக்க முடிகிறது.


அதே சமயம் சில தருணங்களில் என்னை Alexandar இடத்தில் வைத்துப் பார்க்க முடிந்தது. பரிசாகக் கொடுக்கப்பட்ட வரைபடப்புத்தகத்தை நான் தொட்டுப்பார்த்தேன், அந்த பழைய மேப் ஐ ஆராய்ந்தேன், சைக்கிளில் இருந்து விழுந்த பின்னர் நோக்கத்தை கைவிட்டுவிட்டு பின்னர் மறுபடியும் அந்த நோக்கத்தை அடைய எண்ணினேன், எனக்கு சௌகரியப்பட்ட மாதிரி கனவு கண்டேன், கனவை நிஜத்துடன் முடிச்சு போட்டேன், கடைசில் நானே என்னிடம் சரணடைந்தேன்.

இறுதியில் நிஜமா? கனவா? எனத் தெரியாமலே படம் முடிவுற்றது பற்றி சில விவாதங்களைப் பார்த்தேன். இதுதான் Inception படத்திற்கு விதை என்றெல்லாம் வீடியோக்கள் இருந்தன. டர்கோவ்ஸ்கியின் படங்களை Materialistic உலகமாகப் பார்க்கவே கூடாது. அது அவரின் சொந்த உலகம். சினிமா மொழியைச் சரியாகப் பயன்படுத்தி, உணர்ச்சிகளைக் கடத்துபவர் அவர்.

அவரின் பல காட்சிகளை எழுத்தாக்கவோ அல்லது புத்தகமாகவோ படித்து உள் வாங்கிக் கொள்ள முடியாது என்பது என் கருத்து.


ஆர்வம், சோகம், கேள்வி எனப் பலவற்றைத் தூண்டும் அந்தப் பற்றி எரியும் தீ, Alexandar இன் முன்னுரையுடன் சேர்ந்து வரும் காற்றின் சத்தம், அவரின் மனைவின் ஒப்பாரி அழுகை, அவர் கடைசியில் தன் தியாகத்தின் மூலம் துயரத்தில் இருந்து விடுபட்டு சரணடைவது இவற்றையெல்லாம் முழுமையாக வெளிப்படுத்தக் கண்டிப்பாக சினிமொழியால் மட்டுமே முடியும்.

நடிகர்கள் அனைத்துக் காட்சிகளிலும் ஏதேனும் ஒரு அசைவை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்கு அந்த காட்சியில் இல்லையென்றாலும் அவர்களால் அக்காட்சியில் ஏற்படும் தாக்கங்கள் முக்கியமானது. வேலைக்காரிக்கு வைக்கப்பட்ட க்ளோஸ்-அப் இல் Alexandar இ மனைவி அங்கும் இங்கும் நடந்து கொண்டே ஒவ்வொரு வேலையாக சொல்வது, பின்னர் அவ்வேலைக்காரி அவற்றை ஒரு முறை திரும்ப சொல்வது இன்னும் எனக்கு கண்ணருகிலேயே இருக்கிறது. எந்த கதாபாத்திரத்தின் முகத்தை நாம் மறக்கக் கூடாது என்று டர்கோவ்ஸ்கியே முடிவு செய்கிறார்.


சினிமாவை எனக்கு மேலும் நெருக்கமாக்கிய படைப்பாகத் தான் Sacrifice ஐப் பார்க்கிறேன்.
29 views0 comments

Comentários


bottom of page