top of page

ரிதம் (2004) | எடை குறைந்த சினிமா | Rhythm | Vasanth | ARRahman


ஒரே பக்கமாக முரட்டுத்தனத்தால் சாய்ந்த சினிமாவை அவ்வப்போது சிலர் தங்களது எடை குறைந்த திரைப்படங்களால் தராசு முள்ளை மறு பக்கமும் வரச் செய்தனர்.


அவர்களில் வசந்த் ஒரு தனி ரகம். அவர் படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாகத் வெற்றியடையாதவை. அதில் ரிதமும் அடங்கும். சின்ன வயதில் பொதிகையில் தான் முதலில் பார்த்தேன்.

ரஜினிகளால் கெடுக்கப்பட்டு, அஜித், விஜய்களால் முன்னெடுக்கப்பட்டு, 'ஏய்...ஏய்...' என்னும் மற்ற ஹீரோக்களால் தமிழ் சினிமா கிழிந்து போன காலகட்டத்தில் மிகவும் மெல்லிய ‘தீம்தனனா’ என்ற பிளாஸ்திரியால் ஒட்டுப் போட்டார் வசந்த். ரிதம் ஒரு ஏ.ஆர்.ரகுமான் படம் என்றும் சொல்லும் அளவுக்கு இசைத் தென்றல் உழைத்திருப்பார். படம் முழுக்க பரவியிருக்கும் இசை. ஒவ்வொருவருக்கும் ஒரு வகை பிண்னனி இசை.

Co-incidence இல் நம்பிக்கை வர வைத்து விடும் கதை. அதைத் தவிர எனக்கு கண்ணில் பட்டது. வசந்த் மிகவும் லேசாக பழமையைப் பந்தாடியது தான்.

மறுமணம், ஆண்-பெண் சமம், சாதிப்பழக்கங்கள் என போற போக்கில் ஒரு nudge செய்கிறார்.

கணவன் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, ஒரு காலை மட்டும் மேலே தூக்கி வைக்கும் மனைவியைப் பார்த்து நாகேஷ் சொல்வார், ”ஏன்டி...பாக்குறவங்க என்னை உதைக்க வரன்னு நினைப்பாங்க. ரெண்டு காலையும் மேலே தூக்கி வச்சுக்குறதுதான...”


அந்த மனைவிக்கு, கணவன் தான் resource. எல்லாமே அவர் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனாலும், “அதெப்பட்றீ...100 ரூவா கொடுத்த மாதிரி என்ன சொன்னாலும் சிரிக்கிற” என்று நகையாடுவதைக் கூட ரசிக்க முடிகிறது.

‘ஒரு எழவும் தெரியாதா?’ என்று அப்பாவி மனைவியிடம் எரிந்து விழாமலும் சொல்லலாம் என சராசரி கணவர்களை, நாகேஷ் முதுகில் ஒரு தட்டு தட்டுவார்.


மீனாவைத் தனது மருமகளாக ஏற்றுக் கொள்ள இஷ்டமில்லை என்று லஷ்மி சொல்ல அவரது ஜாதியும், மரபும், பழக்க வழக்கங்களும் தான் காரணம்.

‘நான் நாக்குல படாம தண்ணி குடிப்பேன்’ என்பவர், பின்னால் மனம் மாறி வந்த பின்னர் உடனடியாகக் காட்டப்படும் காட்சி மீனா வீட்டுல் அவர் சாப்பிடுவது தான்.


அதே போல மிக முக்கியமான காட்சி. ஒரு பூசாரி, மீனாவுக்கு மறுமணம் செய்யச் சொல்லி அறிவுரை சொல்வது.

“எங்க காலத்துல புருஷன் செத்த உடனே பொண்டாட்டியையும் சேர்த்து எரிச்சுருவா. உடன்கட்டைன்னு பேரு. ஆனா இப்போ அப்படியா?” என எதனால் மீனா ஒதுக்கப் பட்டாரோ அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரால் மரபும், பழக்க வழக்கங்களும் விமர்சனம் செய்ப்படும், முக்கியமாக அந்த காட்சி கோவிலில் நடக்கும்.

”வசந்த் சார் உங்க காலை கொஞ்சம் காட்டுங்க...”

அனைத்து கதாபாத்திரங்களும் ஒருவரோடு ஒருவர் ஏதோ வகையில் இணைந்திருப்பார்கள். அவர்களே தப்பிக்க நினைத்தாலும் விடாமல் இவர்களை மீண்டும் இணைக்கும்.


மணிவண்ணன் மூலமாக இந்தியன் வங்கியில் கணக்கு வைக்க நேரிடுவது, மீண்டும் சந்திக்கும் ஆட்டோக்காரர், ஒரே கடையில் முடி வெட்ட அர்ஜுனும் சிவாவும் வருவது, ஊட்டிக்கு செல்ல அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைப்பது, லஷ்மி அர்ஜுனிடம் டைம் கேட்பது, சிவா சரியான நேரத்தில் உண்மையை உடைப்பது என அடுக்கடுக்காக co-incidences.

சித்ராவின் காதலை ஆடியன்ஸ்க்கு வெளிப்படுத்தியது எவ்வளவு அழகான காட்சி. மீனா அந்த காட்சியை கண்ணை வைத்தே மேலும் 10X அழகாயிருப்பார். தலையில் கையை மடக்கி படுத்துக் கொண்டு வாஞ்சையுடன் தனது மகனிடம் அனுமதி கேட்பார். அது 'ஆமாம்' என்ற பதிலை நோக்கி மட்டுமே பயணிக்கும் என சித்ராவுக்கும் தெரியும், ஆடியன்ஸ்க்கும் தெரியும். இருந்தாலும் நமக்கு அந்த வெளிப்படுத்துதல் அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும்.


ஆனால் கார்த்திக்கிற்கு ஏன், எப்போது மீனா மீது காதல் ஏற்பட்டது என வெளிப்படையாகக் காட்டாதது வெவ்வேறு காரணங்களை ஊகிக்க வைக்கிறது. அம்மாவுக்காகவா? சிவாவுக்காகவா? மீனா மேல் பரிதாபமா? அந்த ரயில் விபத்து செண்டிமெண்டா?


அப்போது மட்டும் சமூக வலைதளங்கள் இருந்திருந்தால், அர்ஜூன் இன்று வரை ஹீரோவாக இருந்திருப்பார் என்பது என்னுடைய ஒரு நப்பாசை😁

இந்த படத்தின் பிண்னனி இசை பாடல்களை விட அபாரமாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது டைட்டில் கார்டில் வரும் இசை தான். இத்தனை வருடங்களில் அந்த படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் என் வாய்க்குள்ளேயே அந்த இசையைப் போட்டுப் பார்ப்பேன்😶


5 பாடல்களும் பஞ்ச பூதங்களைக் குறிப்பவை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் யாருக்கு எந்த பூதம் என்று பொருத்திப் பார்க்க முயற்சித்தேன். கார்த்திக், சித்ரா, ஶ்ரீகாந்த், அருணா மற்றும் சிறுவன் சிவா. இந்த 5 பேர்தான் கதை மாந்தர்கள் என்ற கருதுகோளில் பார்க்கும் போது...(வேண்டாம்!)


Picture Courtesy: PYRAMID

79 views
bottom of page