top of page

வெளிநாட்டு பலியாடுவெளி நாட்டு/ வசதி படைத்தவர்களின் உணவு என்றாலே அது பீட்சா பர்கர் மட்டும் தானா?

‘பீட்சா, பர்கர் திங்குற உங்களுக்கு எங்க தெரியும் விவசாயத்தோட மதிப்பு பத்தி’

- மார்டன் போராளி


‘பீட்சா பர்கர் உண்டு வந்தேன், இட்லியில் எதோ ஒன்று’

- அமெரிக்க ரிட்டன் தமிழன்


‘என் நாய் கூட இதையெல்லாம் சாப்டாது, எதாவது நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ் செஞ்சு கொண்டு வா எனக்கு’

- ஒரு கோடீஸ்வரப் பெண்


நம் திரைப்படங்களில் கவனித்துப் பார்த்தால் இப்படி நிறைய வசனங்கள் சிக்கும். வசதி படைத்தவர்களின் உணவு முறை மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை பாவம் அந்த அப்பாவி பீட்சா மற்றும் பர்கர் மீது கொட்டித் தீர்த்து விட்டனர் தமிழ் சினிமா படைப்பாளிகள்.

விலையின் அடிப்படையில் பார்த்தால் ஒரு நல்ல பீட்சா 120 ரூபாய்க்கு க்கு கூட கிடைக்கிறது. ஆனால் ஒரு தரமான பிரியாணி 200 ரூபாய்க்கு குறைந்து கிடைக்காது. எனில் வார வாரம் மாங்கு மாங்கு என பிரியாணியை பிரித்து மேயும் நடுத்தர வர்க்கம் பணக்கார வர்க்கத்தை விஞ்சி விட்டதா?


ஆரோக்கியத்தின் அடிப்படையில் பார்த்தாலும், எண்ணையில் குளித்து எடுக்கப்பட்ட வெறும் மைதா குவியலான புரோட்டாவை விட பீட்சா எவ்வளவோ பரவாயில்லை. பின்னர் ஏன் அதன் மீது ஒரு வெறுப்புணர்ச்சி பரப்பப் பட்டது.


நடுத்தர வர்க்கத்தால் அனுபவிக்க முடியாத விஷயங்களைத் தவறு என ஊடகங்கள் (முக்கியமாக சினிமா) நமக்குக் கற்பித்ததே காரணம். வசதி படைத்தவர்களின் வாழ்க்கையைக் காட்டும் சினிமாக்கள் கூட, பெரும்பான்மை நடுத்தர ஆடியன்ஸை குஷிப்படுத்த மேலே குறிப்பிட்ட வசனங்களை வைத்திருப்பார்கள். மத்தபடி ஆரோக்கியம் மண்ணாங்கட்டியெல்லாம் ஒன்றுமில்லை. இப்படி தூண்டி விட்டுத்தான் Diet யை கேலிக்குரிய விஷயமாக மாறியது. சாப்பிடாமல் இருப்பதுதான் Diet என பெரும்பாலானவர்கள் நினைக்கும்படி மாற்றி விட்டது சினிமா.


நம் உணவு முறை எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரியாமலே, தமிழர் மரபு என தவறாகக் கடத்தப்பட்ட உணவுகளை தினமும் தின்று கொண்டிருக்கிறோம்.

ராஜ ராஜ சோழன் ஏதோ இட்லி உப்புமா சாப்பிட்டார் என்பது போல, நம் ஆட்கள் இட்லியை பற்றி பீத்திக் கொள்வார்கள்.

இட்லி, தோசை எல்லாம் எப்போது நம் உணவு முறைக்குள் வந்தது எனத் தேடிப் பாருங்கள்.

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்வது இப்போதெல்லம் சகஜம் ஆகி விட்டது. தீபாவளி சமயம் டிவி விளம்பரங்களைப் பாருங்கள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என குலாம் ஜாமூன் மாவு விளம்பரங்கள் நிறைய வரும்.

ஏன் என்றே தெரியாமல் வாளி நிறைய செய்து வைத்து, கிண்ணம் நிறைய ஜீராவை ஊற்றி நக்காத குறையாக தின்று விட்டு, சர்க்கரை அளவை ஏற்றி விடும் குலாப் ஜாமுன் கூடிய சீக்கிரம் தமிழர் மரபு ஆகி விடும். 2020 குழந்தைகள் வருங்காலத்தில், குலாப் ஜாமூன் என்பது தமிழர்களால் கண்டுபிடிக்கப் பட்டது என உங்களில் கித்னா பேருக்கு தெரியும் என யூடியூப் வீடியோ போடுவார்கள்.


கலாச்சாரக் கலப்புகள் தடுக்கப் பட முடியாதது.

பெரும்பான்மையான கூட்டம் எதை விரும்புகிறதோ அதுவே ஒரு கலாச்சாரத்தின் அடையாளமாக மாறி விடும். அதுவே பின்னர் பாரம்பரியமாகக் கடத்தப் படும். உதாரணத்திற்கு, சுடிதார் எனப்படும் பாகிஸ்தான்/வட இந்திய உடை நம் ஊரில் மூலை முடுக்கெல்லாம் பயன்படுத்தப்படுவது.


எனவே இது போன்ற கலாச்சாரக் கலப்புகளில் நமக்குப் பிடித்த விஷயங்களை நாமாகவேத் தேடிப் பிடித்து அனுபவிப்பது தவறில்லை. ஊடகங்களின் மூளைச்சலவைக்குள் சிக்காமல் புதுப்புது விஷயங்களை அனுபவிக்க வேண்டுமானால், நமக்கு என்ன வேண்டும் என நாம் தீர்மானிக்க வேண்டும். அதற்கு இப்போது நாம் செலவு செய்யும் அதே அளவு நேரமும் பணமும் போதுமானது. மேற்கொண்டு தேவைப் படுவது தேடல் மட்டும் தான்!


நல்லா பிணைஞ்சு அடிடா...ஆண்டவா...
5 views0 comments

Comments


bottom of page