ஒருவர் அழகா? அழகில்லையா? என எப்படி தெரிந்துகொள்வது. பொத்தாம் பொதுவாக யாரிடம் கேட்டாலும் ’அழகில்லை’ என்ற உண்மையை சொல்லக் கூச்சப் படுவார்கள். ஆனால் ‘அழகு’ என்றால் கண்டிப்பாக சொல்ல வாய்ப்புண்டு (பொறாமை இல்லையென்றால்)
ஆனால் இதுவே ஒருவருக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது அவரை விரும்புபவர்களுக்கு எப்பேர்ப்பட்ட முகமும் அழகாகத் தான் தெரியும். அந்த காக்கைக் குஞ்சும் தான் அழகா இல்லையா என்பதை ஒரு நொடியேனும் மறந்து விட வாய்ப்புள்ளது. அப்பா, அம்மா, மனைவி, நண்பர்கள் என சிலருடன் இருக்கும்போது.
ஆனா கோரம் அப்படின்றது வேற. எப்பவுமே அது விமர்சனம் செய்யப்படக் கூடியது. யார் வேண்டுமானாலும் கூச்சப்படாமல் அந்த கோரத்தை குத்திக் காட்டலாம். பக்கத்து வீட்டுக்காரன், ரோட்டுல போறவன், வேலை குடுக்கறவன், கூட வேலை பாக்குறவன் என நீண்டு கொண்டே போகும்.
அப்படிப்பட்ட கோர முகம் ஒருத்தனுக்கு இருந்தால்? அவனுக்கு சாதாரண மனுஷனுக்கு இருக்குற ஆசையெல்லாம் இருக்கக் கூடாதுன்னு உலகம் அவனை ஒதுக்குறப்ப அவன் என்ன செய்வான்?
காசு, வீடு, சொந்தம், நண்பன் இல்லாதவன விட பாவம் மூஞ்சு இல்லாதவன்.
ரங்கனுக்கு ஏதாவது செஞ்சு சகஜமான வாழ்க்கையை வாழனும். நாடகம் நடிக்கப் பாக்குறான், அரசியல் கோஷம் போட்லாம்னு பாக்குறான், ஷூட்டிங்ல வேலை பாத்து சாப்பிடலாம்ன்னு நினைக்குறான். ஆனா யாருமே அவனுக்கு ஒரு இடத்தைக் கொடுக்கலை. (அந்த நாடக நடிப்பில் வித்தியாசம் காட்டுவது, காவியத்தலைவன் படத்தில் சித்தார்த் நடிப்பதை நியாபகப்படுத்தியது. இங்கே நாஸர் குரு!)
அந்த கோர முகத்தை வச்சு எதுக்கும் லாயக்குப் பட மாட்டோம் அப்படின்னு ராணுவத்துல சேர்ந்து நாட்டுக்காக செத்துப் போயிறலாம்ன்னு பார்த்தா அதுக்கு கூட அவனைச் சேத்துக்கல. எதிரி நாட்டுக்காரன், ’இதுலாம் ஒரு மூஞ்சி‘ ன்னு நம்மை நாட்டை கேவலப்படுத்திருவான்னு அந்த செலக்ஷன் ஆபிஸர் நினைச்சாரோ என்னவோ?
ஆனா அவனுக்கு செத்து போகனும்ன்னு விரக்தி இல்லை. எதாவது செய்யனும்.. சம்பாதிக்கனும்...காதலிக்கனும்...சாப்பிடனும் நல்லா...! ஆனா அது பிச்சையா வேண்டாம். எல்லாரும் எப்படி சம்பாதிக்கிறாங்களோ அப்படி வர வேண்டும்.
அரசியல் கோஷம் போட கொடுத்த இலவச சாப்பாடைக் கூட அவர்கள் விரட்டி விட்ட கோவத்தில் துப்புவது இதுக்கு உதாரணம். வழி இல்லாதவனுக்கு, வாய் வரைக்கும் எட்டுன சாப்பாட்டை தொண்டைக்கு உள்ளே அனுப்பாம வெளியே அனுப்புறதுக்கு அவனுக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்க வேண்டும்.
அவனுக்கு முகத்துல மட்டும்தான் குறைன்னு தெளிவாத் தெரியுது. அதைப் பார்த்து ஒதுக்காம ஒரு பொண்ணு நம்மக்கிட்டயே வரான்னு அதை அவன் காதல் நினைக்குறது எவ்வளவு இயல்பு. நான் உன்னை காதலிக்கிறேன்னு அவன் சொல்லல, ”நான் பெரிய ஆள் ஆகி வர்ற வரைக்கும் என்னக்காக காத்திருப்பியா?”. அவன் நேரடியா இதைத்தான் கேக்குறான். அவனது கோர முகம் அவளுக்குப் பிரச்சனை இல்லைன்னு அவன் நம்புறான்.
ஒரு கட்டத்துல ஒரு முகமூடியால அவனுக்கு ஒரு புது முகம் கிடைக்குது. அதுவும் அழகான முகம். அவன் கண்ணுக்கு மட்டுமில்ல, ஊர் உலகத்துக்கே பிடிச்ச முகம் கிடைக்குது. அந்த முகத்தால அவனுக்கு நினைச்சுப் பாக்கத எல்லாமே கிடைக்குது. அவனால கையாள முடியாத அளவுக்கு பணம், புகழ், அந்தஸ்து, ரசிகர்கள், அழகான மனைவி எல்லாமே.
ஆனா அவனுக்கு மூஞ்சுலயும் மனசுலயும் ஒரே நமைச்சல். மூகமூடியால முகத்துல நமைச்சல், புகழ் தாங்க முடியாததால மனசுல நமைச்சல்.
நமைச்சலில் இருந்து தப்பிக்க ஒரு முடிவு எடுக்கிறான். ஆனால் அதனால் அவனுக்கு என்ன நேர்ந்தது என படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த படம் நிறைய பேர் பார்க்காததால், இதை இப்படியே விட்டு விடுகிறேன்.
படத்தின் இடையில் வரும் அந்த கணவன்-மனைவி காட்சி, எளிமையாக, எல்லோராலும் தொடர்பு படுத்திக் கொண்டு காட்சியோடு ஒன்றக் கூடிய வகையில் இருக்கும். விஜய் மற்றும் மௌனிகா இருவரும் எப்பேர்ப்பட்ட நடிகர்கள் என 5 நிமிடத்தில் காட்டி விடுவார்கள். இவர்களை வைத்து மட்டுமே ஒரு Spin-off எடுக்கலாம்.
Kommentare