ஜுராசிக் வோர்ல்ட்: டொமினியன் (2022)
90 களில் பிரம்மித்து பார்த்த ஜுராசிக் பார்க் படத்தின் எத்தனையாவதோ பாகம் இது. உண்மையைச் சொல்லப்போனால் இரண்டாம் பாகமே அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இருக்காது.
ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் தமிழ் டப்பிங்கில் கறிக் குழம்பு சாப்பிட்டுக் கொண்டே பார்த்த ஞாபகம்.அந்த ஒட்டிக் கொண்ட ஞாபகங்களை வைத்தே இன்றும் நம்மிடம் காசு பார்க்கிறார்கள். அந்த பழைய ஜுராசிக் பார்க் தீம் மியூசிக் வரும்போதெல்லாம் மனதிற்குள் என்னவோ செய்கிறது.
படம் வழக்கம்போல Running and Chasing தான். மால்டா-வில் நடக்கும் சண்டைக் காட்சி தவிர மற்ற எல்லாமே B-grade படங்களைப் போலத்தான் இருக்கிறது. பிரவுசிங் சென்டர் காலகட்டத்தில் நான் வழக்கமாக போகும் கடையின் வெளியே கொத்து கொத்தாக CD க்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஏன் என்று கேட்டதற்கு தேவையில்லாதவை எனக் கடைக்காரர் சொல்ல அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து ஒன்று ஒன்றாக போட்டுப் பார்த்தேன். எல்லாமே அட்டு ஆங்கிலப் படங்கள். இவையெல்லாம் வெளிவந்ததே யாருக்கும் தெரிந்திருக்காது.
அப்போது தான் தெரியும் எனக்கு ஆங்கிலப் படம் என்றாலே நல்ல படங்கள் இல்லை, ஹிட் அடித்த படங்களை மட்டுமே TV இல் ஒளி பரப்புகிறார்கள் என்று. இப்போதும் Youtube நிறைய அது போன்ற படங்கள் தமிழ் டப்பிங்கில் எல்லாம் கூட கிடைக்கும். நானும் பார்ப்பதுண்டு, எவ்வளவு மட்டமாக எடுக்கிறார்கள் என்று.
அது போன்ற ஒரு படத்தை காசு கொடுத்து தியேட்டரில் பார்த்தது போல இருந்தது. நல்ல பட்ஜெட் போட்டு கிராபிக்ஸ்க்கு செலவு செய்தவர்கள் கொஞ்சம் அழுத்தமாக கதையும் வைத்திருக்கலாம். ரொம்பவும் மேம்போக்கான கதை, நடிகர்களும் சும்மா காசு வருது ஏன் விடுவானேன் என்பது போல நடித்திருக்கிறார்கள், கதாநாயகியைத் தவிர (Bryce Dallas Howard).
Landmark சொன்னால் கூட ஒரு இடத்தில் ஒருவரைச் சந்திக்க திண்டாடுவோம், படத்தில் சகட்டு மேனிக்கு எல்லாரும் சொல்லி வைத்தாற்போல் சந்தித்துக் கொள்கிறார்கள். உடனே set சேர்ந்து கொண்டு காமெடி வசனங்கள் வேறு. தியேட்டரில் ஒருவர் கூட சிரிக்கவில்லை. அவ்வளவு பழைய method ஐப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கார் ஒரு சரிவில் தொங்கியபடி நிற்கிறது, 'ஓகே, பாத்தீங்களா? அவ்வளவுதான் தப்பிச்சுட்டோம்' என சொன்ன மறு நொடி கார் உருண்டு விழுகிறது. இதே உத்தியை 3 இடங்களில் வைத்திருக்கிறார்கள். (விமானம் விழும் முன், Chris Pratt ஒரு டையனசோரிடம் இருந்து தப்பித்த பின்னர்). அவ்வளவு கற்பனை வறட்சியா?
முழுக்க முழுக்க குழந்தைகளை குறி வைத்து எடுத்திருக்கிறார்கள். அய்யோ பாவம், கூப்பிட்டு வரும் அப்பா அம்மாக்களுக்கு என்று 'மால்டா' காட்சியை மட்டும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். இதே போலத் தான் முந்தைய பாகத்தில் எரி மலை வெடிக்கும்போது தப்பிக்கும் காட்சியும் இருக்கும், அதுவும் trailer இல் வந்துவிட்டதால் படத்தில் ஒன்றுமே இல்லாதது போல ஆகிவிட்டது.
கிராபிக்ஸ் வெறும் வெடித்து சிதறுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. லோகஸ்ட் வரும் காட்சிகள் சற்று தேவலை. மற்றபடி முக்கியமான டையனசோர்கள் எல்லாம் பழையவையே. முதல் பாகம் 'ஆ..' என்று வாய் பிளக்க வைக்கக் காரணம், அதற்கு முன் டையனோசர்களை 'ஒன்னாப்பு' புஸ்தகத்தில் மட்டுமே பார்த்த நமக்கு அவற்றை தத்ரூபமாக அதன் குணாதிசயங்களோடு காட்டியதே.
இங்கே அதே T-Rex, அதைப்போலவே இருக்கும் மற்ற ரெண்டு புதிய டையனோசர்களோடு சண்டை போடுகிறது. ரௌத்திரம் படத்தில் இடைவேளை வரை கௌரி கௌரி என்று பில்டப் கொடித்து கடைசியில் செண்ட்ராயனை காட்டுவார்கள், ஆனால் அவரது அஸ்ஸிஸ்டண்ட் அடியாள் பார்க்க வில்லத்தனமாக இருப்பார். அப்படித்தான் ஆனது இங்கேயும். எல்லாமே ஒன்று போல வேறு இருக்கிறது.
முடிவில் தீர்வைப் பற்றி காட்சிகளாக வைக்காமல், டிவியில் செய்தியாகக் காட்டி போங்கு அடித்து விட்டு உலகம் டையனோசர்களோடு வாழக் கற்றுக் கொண்டுவிட்டது என சுபம் போட்டு விட்டார்கள்.
என்லே படம் இது
Comments