top of page

கேஸ் ஸ்டவ் ரிப்பேர் தாத்தா


அவர் அறிமுகம் ஆன அப்புறம் அஞ்சு தடவை வீடு மாறி விட்டோம். ஆனாலும் எப்படி தான் சரியாக வீடு தேடி வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை அம்மா தெருவில் எங்காவது பார்த்து வழி சொல்லியிருக்கலாம் புது வீட்டிற்கு.


வீடு காலி செய்து விட்டு, வீட்டு உரிமையாளரிடம் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு தான் கிளம்புவோம். ‘அட...இவன் நம்ம தெரு காரன் தான்டா’ என்று தினமும் குரைக்காமல் விட்டு விடும் தெரு நாய்களிடம் சொல்லிக் கொள்வதில்லை. ஆனாலும், “சரி அதான் காலி பண்ணி வேற ஏரியா போய்ட்டானே இனி இவனுக்கு என்ன மரியாதை” என நினைக்காது.


அன்னியர் ஒருவரை ஒரு தடவை தாத்தா, மாமா, அண்ணன் என்று முறை வைத்து கூப்பிட்டு விட்டால் அதன் பின்னர், நான், நிஷா, அம்மா எல்லோரும் அப்படியே தான் கூப்பிடுவோம் கடைசி வரை. அவர் எனக்கும் தாத்தா அம்மாவுக்கும் தாத்தா. முறுக்கு கொண்டு வரும் அக்கா எனக்கும் அக்கா, என் அம்மாவுக்கும் அக்கா. அப்பாவுக்கு எல்லாருமே வெறும் வாங்க போங்க தான், கோவம் வராத வரை.


‘கேஸ் ரிப்பேர்...கேஸ் ரிப்பேர்' என்று கத்திக் கொண்டே தாத்தா வந்ததாய் நியாபகம் இல்லை. நேரே வீட்டு வாசலில் வந்து ‘அம்மா இருக்கா?’ என்று கேட்பார்.

நான் அல்லது நிஷா என்றால் ‘ம்ம்ம்மா..’ என்று கத்துவோம். அப்பா என்றால், ‘தனோம்…’ என்று கத்துவார். ஆனால் அம்மா மட்டும், ‘ என்ன தாத்தா…’ என்பார்.


பெரும்பாலும் அவர் வந்தாலே அம்மாவுக்கு கேஸ் இல் கண்டிப்பாக ரிப்பேர் செய்ய வேண்டியது எதாவது இருக்கும். அவருக்கு காது சரியாக கேட்காது, நாங்கள் கத்தி பேச வேண்டும். அப்படியே காதில் கேட்டாலும் அது அவர் மண்டைக்குள் போகாது என தோன்றும். ஏனெனில் சொன்னதே திரும்ப திரும்ப சொல்வார். காலேஜ்க்கும் வேலைக்கும் வெளி ஊருக்கு போய் விட்டதால் அவரை நான் மறந்தே விட்டேன். பெங்களூரு ரூமில் இண்டக்ஷன் ஸ்டவ் வேறு, இல்லையெனில் அவரை நியாபகமாவது வைத்திருந்திருப்பேன்.


கொரோனாவால் நெல்லையிலேயே இருக்க வேண்டிய நிலை. நிஷாவும் ஆதிக் உம் ரூமை எடுத்துக் கொண்டதால், கம்பூட்டர் டேபிள் வைக்க உள்ளே அப்போது இடமில்லை எனவே வீட்டு வாசலில் இருந்து வேலை பார்ப்பேன்.


ஒரு நாள் காலையில், ‘அம்மா இருக்கா..?’ என்று சத்தம். நல்ல வேளை அப்போது நான் ஹெட்போன் போடவில்லை என்பதால் எனக்கு காது கேட்டது. மண்டைக்குள் போனது.


அன்றைக்கும் அம்மாவுக்கு ரிப்பேர் செய்யப் பட வேண்டியது இருந்தது. எடுத்து வாசலில் வைத்தார் கேஸ் ஸ்டவ்வை. கீழே உட்கார்ந்து அதை அக்கு வேராக, ஆணி வேராக பிரித்து போட்டார் தாத்தா. ஊதி ஊதி அழுக்கு எடுத்தார். என்னை ஒரு முறை பார்த்தார். பழைய பல் விளக்கும் பிரஷ் வைத்து துரு எடுத்தார். மறுபடி என்னை ஒரு முறை பார்த்தார்.


சின்ன வயதில் ஒரு முறை மாமா திட்டியது மறுபடி காதில் கேட்டது.

‘பெரிய ஆள் மாதிரி, ஆளுக முன்னால மரியாத இல்லாம சேர்ல உக்காந்திருக்க...எறங்கு...’

ஆனால் இந்த தடவை இறங்க வில்லை. அன்றைக்கும் இறங்கியதற்கும் இன்றைக்கு இறங்காததற்கும் காரணம் என்று எதுவுமே இல்லை. காரணம் அவசியமும் இல்லை. 30செமீ உயர வித்தியாசம் தான் மரியாதையை தீர்மானிக்கிறதா?


தாத்தா பேச ஆரம்பித்தார்.

“போய் கேட்டா சுடுவானோ…?”

“நெஞ்ச நிமித்தி சுடுல பாப்போம்னு நின்றுவேன்…”

“அந்த காலத்துலயே போய் நின்னவன்…” என்று அந்த எலும்பு கூடு நெஞ்சை நிமிர்த்தினார்.

“ஏல இங்க கேளு…”

“அந்த காலத்துலயே போய் நின்னவன்…”

“நெஞ்ச நிமித்தி சுடுலனு நின்றுவேன்…”


“தாத்தா...அவன் வேல பாக்கான். அவன கூப்டாதீங்க" என்றார் அம்மா. அப்படியா என்பது போல தலையை ஆட்டி விட்டு “சுட்ருவானோ..?” என்றார் மறுபடியும்.


இவ்வளவுக்கும் இடையில் அவரது வேலையும் நடந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது என்னைப் பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை. எனக்கும் அவரிடம் என்ன பேச என்று தெரியவில்லை என்பதால் நான் அதை கண்டு கொள்ளவில்லை.


வேலை முடிந்தது. எவ்வளவு ரூபாய் அம்மா கொடுத்தார் என்று தெரியவில்லை ஒன்றுமே சொல்லாமல் வாங்கிக் கொண்டார். படிக்கட்டில் ஒரு காலை முதலில் வைத்து பின்னர் அடுத்த காலை வைத்து மெதுவாக இறங்க ஆரம்பித்தார்.


‘எதுக்கு என்னிடம் பேச நினைத்தார், அதுவும் இந்த விஷயத்தை? அடுத்து எப்போது வருவார்? போன் நம்பர் லாம் உண்டா இவரிடம்? இந்த காசை வீட்டில் கொடுப்பாரா? இவருக்கு எத்தனை பேரன்? ஆச்சி இன்னும் உயிரோடதான் இருக்குமா? கண்டிப்பா இருக்கும் இன்னும், இல்லனா எதுக்கு இந்த வயசுல வேலை பார்க்க போறாரு. ஆமா இவரு வயசு என்ன இருக்கும்? 80க்கு மேல இருக்குமா? படி இறங்கி விட்டு ‘டாடா’ காட்டுவாரா? ஏன் எல்லாரும் கடைசி படி இறங்கியதும் போய்ட்டு வரேன் என்று மறுபடி ஒருமுறை சொல்கிறார்கள் ‘’


தாத்தா கடைசி படி இறங்கி திரும்பி பார்க்காமலே போய் விட்டார்.


13 views0 comments

Comments


bottom of page