ரொம்பவும் தள்ளி இருப்பதால் அவை பேசுவது காதில் விழவில்லை என நினைத்தேன். அதற்கு முன் அவை பேசவே செய்யாது என்றும் நினைத்தேன். ஆனால் என்னோடு பேச சில மேகங்களை என் தலைக்கு மேலே தினமும் அனுப்பி வைக்கிறது வானம்.
எனக்கு சந்தேகம் என்னவென்றால் அந்த மேகம் எனக்கு என்று ஒதுக்கப்பட்டதா? இல்லை தினமும் புதிதாக ஒன்று வருகிறதா? தினமும் ஒன்று வந்தால் எப்படி நேற்று பேசியதை நியாபகம் வைத்துக் கொண்டு உரையாடலை தொடர முடியும். இரவில் எங்கே போகும் தூங்க?
ராத்திரியில், சுற்றி இருட்டு, நிலா அருகில் மட்டுமே மேகங்கள் தெரிகிறது, அவை எல்லாம் நைட் ஷிப்ட் மேகங்களா? இல்லை பகல் மேகங்கள்தான் இருட்டில் அவைகளுக்கென ஒதுக்கப்பட்ட ஆள்களை கண்டுபிடிக்க முடியாமல் தேடி அலைகிறதா?
என் மேகத்தை அடையாளம் காண்பதும் கஷ்டமாக உள்ளது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவம்.
திடீரென்று மேலே மேகத்தை பார்க்க தோன்றும், அப்போது ஒரு மேகம் தெளிவான வடிவத்தோடு போய்க்கொண்டிருக்கும், அப்போது தான் தெரிந்தது, நாம் அதைத் தேட வேண்டியதில்லை. அவை நம் இடத்திற்கு வந்ததும் நம்மை கூப்பிடுகின்றன என்று.
‘சைய்! என்னப்பா மழை பெஞ்சு நச நச ன்னு இருக்கு' என்று சொன்னது காதில் விழுந்து விடுமோ என்னவோ, மழைக் காலத்தில் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் மற்ற மேகங்களுக்குள் ஒளிந்து கொள்கிறது.
கோவத்துல முகம் சிவக்கத்தான செய்யனும், ஆனா இதுக்கு மட்டும் கருத்துரும்.
செத்து போனால் தான் முகம் கருக்கும். ஒரு வேலை மனசு உடைஞ்சு ‘அழுது அழுது’ செத்து போய்ருச்சோ? இந்து மேகம் என்றால் மறு பிறவியாவது கிடைக்கும்.
தரையில் இருந்து எவ்வளவு தூரம் வரை ஒரு மேகம் கண்ணுக்கு தெரியும்? ஒரு பெரிய பரப்பளவில் இருந்து பார்க்கும் எல்லாருக்கும் அந்த ஒரே மேகம் தான் சொந்தமா?
“இந்த பாட்டு, என்னோட பாட்டு” என்று ஒரு சினிமா பாட்டை சொந்தம் கொண்டாடும் பாப்பாவை கிண்டலாக பார்த்து சிரித்து வேற தொலைத்திருக்கிறேன்.
கீழே இருந்து பேசினால் வேலைக்கு ஆகாது என்று மலை பிரதேசங்கள் சென்று பார்த்தேன், வழக்கமாக பார்க்கும் உருவம் இல்லை அங்கே. வெறும் புகை. சரி இன்னும் உயரே இருந்து பார்க்கலாம் என்று விமானம் ஏறி சென்றேன். துரதிர்ஷ்டவசமாக அது ராத்திரி வேளை என்பதால், இப்போது நான் என் மேகத்தை தேட அலைய வேண்டியதாயிற்று. சரி, நாளைக்கு பகலில் வரட்டும் என்று வெளி நாட்டில் இறங்கி மேலே அண்ணாந்து பார்த்தேன். மனிதர்களைப் போல மொழி, நடை, உடை, அலங்காரம் என எதையும் அந்த நாட்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளாமல் அதே உருவத்தோடு மிதந்தது, எனக்கு மட்டுமான மேகம்.
Comments