பிரேசில் நாட்டில் இருக்கும் Bacurau (பகுரா) என்ற கிராமத்தில், நம் கிராமங்களைப் போலவே எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் என்றவாறு வாழ்கிறார்கள் ஊர் மக்கள். பாறைகள் நிறைந்து நடு நடுவே மரங்கள் முளைத்திருக்கின்ற காடு அது. மின்சாரம், இண்டர்நெட், ஸ்மார்ட் கருவிகள் எல்லாம் இருக்கிறது ஆனால் தண்ணீர் இல்லை.
வெளி நாட்டு படங்களை பார்க்கும் போது நமது கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுக் கொண்டுதான் பார்க்க தோன்றும். ஏமாற்றும் அரசியல்வாதிகள், ஓட்டுக்காக தரமற்ற இலவச பொருள்களை தருவது, தண்ணீர் பிரச்சனை, சாவுக்கு ஊரே கூடி ஸ்பீக்கரில் பாட்டு போடுவது, பிணத்தை அவர்களே ஊர்வலமாக கொண்டு சென்று புதைப்பது (வெட்டியான் இல்லை!) என அவர்களது கலாச்சாரம், அரசியல், நிலப்பரப்பு போன்றவற்றோடு நம்மால் ஒத்துப் போக முடிகிறது.
ஆனால் ஒரு முக்கியமான வேற்றுமை, காம இச்சையின் மீதான பார்வை. சகஜமாக பேசப் படக் கூடாத விஷயங்களில் ஒன்றாக நமது கலாச்சரத்தில் வைத்திருக்கும் ஒரு விஷயம் அங்கே பெற்றோர் முன்பே பேசப் படுகிறது, மொத்தமே 100 பேர் கூட இல்லாத ஊரில் விபச்சார வாகனம் ஒன்று உள்ளது, ஒரு ஆண்-பெண் தங்கள் உலகத்தில் தனியாக இருப்பதை பார்த்து விட்டு எனக்கென்ன என்று சர்வ சாதரணமாக கடந்து செல்கிறார்கள், அதற்கு அந்த ஜோடி கூச்சப் படவும் இல்லை. இங்கே நம் ஊரில் கை கோர்த்து கூட போக முடியாது. நெற்றி, கழுத்து, பாதம் என அந்த பெண்ணிடம் லைசன்ஸ் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பார்கள் (ஆணுக்கு!). வருங்காலத்தில் ஓரினச்சேர்க்கைக் காரர்களை கல்யாணம் ஆனவர்களா, இல்லையா என எப்படி கண்டுபிடிக்க போகிறோம்? இரண்டு பேரில் யார் தாலி கட்டிக் கொள்ள வேண்டும்?!
போதும், கதைக்கு வருவோம்.
ஊர் தலைவி (அதெப்படிங்க குஷ்பூ நாட்டாமை ஆக முடியும்?) இறந்ததற்கு துக்கம் அனுசரிக்க ஊர் மக்கள் கூடுவதில் ஆரம்பிக்கிறது கதை. அவரது சடங்கிற்கு அடுத்த நாள் எல்லோரும் தங்களது அன்றாட தினசரி வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். வரும் தேர்தலுக்கு ஓட்டு கேட்பதற்காக மேயர் வருகிறார். இது தெரிந்ததும் மக்கள் அனைவரும் அவர்கள் வீட்டிற்குள் ஓடி ஒளிகிறார்கள். தங்களது தண்ணீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்காத மேயரை சந்திக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.
இலவசமாக புத்தகங்களும், உணவு மற்றும் மருந்து பொருள்களும் கொண்டு வந்திருப்பதாக கூறியும் மக்கள் அவரை வீட்டிற்குள் இருந்தவாறே வசை பாடி அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். ஆனாலும் அந்த இலவச பொருள்களை ஊர் மக்கள் கூடி அவர்களுக்கு தேவையானதை எடுத்திக் கொள்கின்றனர். அவை எல்லாமே காலாவதியானவை, புத்தகங்களைத் தவிர!
அதன் பின்னர் ஊரில் சில மர்மமான விஷயங்கள் நடக்கின்றன. Google Map இல் இருந்து ஊர் காணாமல் போகிறது, பறக்கும் தட்டு ஒன்று துரத்துகிறது, நடு இரவில் குதிரைக் கூட்டம் தறி கெட்டு ஊருக்குள் ஓடி வருகிறது, இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் ஊருக்குள் நுழைகிறார்கள், இப்படி பரீட்சையப் படாத விஷயங்களால் மக்கள் குழம்புகிறார்கள். சில பேர் மர்மமாக கொல்லவும் படுகிறார்கள்.
அதே நேரம் ஊருக்கு வெளியே வெளி நாட்டவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்ட கொலைகாரர்கள். யாரோ ஒருவரின் தூண்டுதலில் இந்த ஊரையே தடம் தெரியாமல் அழிக்க வந்திருக்கிறார்கள். எப்படி ஊர் மக்கள் இந்த சதியை முறி அடிக்கிறார்கள் என்பதை மிகைப் படுத்தாமல் காட்டியிருக்கிறார்கள்.
வன்முறை காட்சிகளை விட பல மடங்கு மன அழுத்தம் தரக் கூடியது உரையாடல்கள். Quentin Tarantino படங்களில் வன்முறை காட்சிகள் ஒரு நீண்ட உரையாடலுக்கு பின்னர் வருவதைப் பார்த்திருக்கலாம். யார் எப்போது என்ன பேசி பிரச்சனை வெடிக்கப் போகிறதோ என நம்மை பதட்டப்பட வைத்து பின்னர் வன்முறை நிகழும் போது நாமும் அந்த இடத்தில் இருப்பதைப் போல உணர்கிறோம் (வடசென்னையில் ‘ராஜன்’ கொலை செய்யப்படும் காட்சி). ஏனென்றால் நமது கவனம் முழுக்க வசனத்தில் இருக்கும். இப்படத்தில் வசனத்திற்கு பதிலாக காட்சிகளைப் பயன்படுத்தி இந்த அழுத்தத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
புயலுக்கு பின் அமைதி ஆனால் புயலுக்கு முன்? நம்மைச் சுற்றி இருக்கிறதா இல்லையா என தெரியாமல் வலம் வரும் காற்று கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று புயலாக மாறுவது போல, படத்தின் இறுதிக் காட்சியில் அழுத்தம் ஏற்றிக் கொண்டே சென்று புயலைக் காட்டி பின்னர் அமைதி நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் மீண்டும் இன்னொரு புயல் வரும் என்ற எச்சரிக்கையோடு. ஆனால் இம்முறை மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
படம் முழுக்க மிக எளிமையான காட்சிப் படுத்தல். ஆனால் ஒரே காட்சியிலேயே ஒரு sequence இல் இருந்து இன்னொன்றிற்கு செல்ல Transitions ஐப் பயன்படுத்தி இருப்பது ஏன் என தெரியவில்லை.
ஒலிச்சேர்க்கை பற்றிய விமர்சனங்களுக்கு நான் இன்னும் தயாராக வில்லை. நடிகர்கள் நடிப்பதே தெரியவில்லை, யதார்த்தமாக இருக்கிறது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி மட்டும் ஏன் நாகர்கோவில் வட்டார வழக்கில் பேசவில்லை என்ற கேள்வி அந்த வழக்கை பேச அல்லது தெரிந்தவர்களுக்கு மட்டுமே வரும், மற்றவர்களுக்கு எளிதில் கவனத்தில் வராது. அது போல போர்ச்சுகீஸு மொழியே நமக்கு தெரியாது என்ற பட்சத்தில், இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் முழுமையான யதார்தத்தை காட்டியுள்ளனவா என்பது எனக்கு சந்தேகம். இது பொதுவாகவே எல்லா வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போதும் எழும் சந்தேகம் தான். இதை தெளிவு படுத்த அந்த வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் விமர்சனங்களை படித்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்படி ஒரு ஊர் உண்மையில் இல்லை, கற்பனையாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
OTT Platform: MUBI
Comments