“கடவுள் பூமிக்கு வருவதில்லை, தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்" என்று ஒரு பாடலின் வரியில் வரும். அப்போ சாத்தான் பூமிக்கு வரவில்லை என்றால் யாரை அனுப்பி வைப்பான்?
ராம்ஸே…
வில்லனுக்கும் சாத்தானுக்கும் வித்தியாசம் உண்டு.
நன்மை தீமைகளை அறிந்து அதில் தீமையைத் தேர்ந்தெடுப்பவன் வில்லன்.
நன்மை என்ற ஒன்றையே அறியாதவன் சாத்தான். ஒரு பல்லிக்கு, ட்யூப் லைட் எப்படி எரிகிறது என புரிந்து கொள்ளும் திறன் இல்லை, அதுபோல தான் சாத்தானுக்கு நன்மை என்ற ட்யூப் லைட்டைப் புரிந்து கொள்ளும் திறனும் அவசியமும் இல்லை.
அவன் செயல்களை நல்லது, கெட்டது எனத் தர்க்கத்திற்குள் அடைக்க முடியாது. தோன்றுவதை செய்பவன். அப்படித்தான் ராம்ஸே. அவன் செய்யும் செயல்களால் யாருக்கேனும் நன்மை நடந்தால் அதற்கு சாத்தானின் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’.
ராம்ஸேக்கு, தொழிலாளர்களிடம் நடந்து கனிவாக நடந்து கொள்வதும், மரியத்தை சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பதும் ஒரே வகைதான். அது அவனுக்காக செய்து கொள்வதே தவிர, பிறருக்காக இல்லை. ஒரு பெண்ணை கட்டாயமாக புணர்வது தவறு என சட்டம் போட்டால்தான் நமக்கு தெரியுமா என்ன? நம் மனசாட்சிக்குத் தெரியும் அல்லவா? ஆனால் ராம்ஸேக்கு அது தெரியாது.
இப்படித்தான் ராம்ஸே நாம் பார்க்கும் வில்லன்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறான். முழு சாத்தான் என நிரூபிக்கிறான். கடல் படத்தில் தன்னைத் தானே ‘நான் சாத்தான் டே...’ என அழைத்துக் கொள்ளும் பாதர் பெர்க்மான்ஸ் கதாப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டால். அவனுக்கு பலவீனங்கள் உண்டு. தனக்கு பிறந்த பெண்ணை அவனால் கொல்ல முடியவில்லை. கொள்வது என்ன?, அவள் இவனை ‘அப்பா’ என அழைப்பதைக் கூட பலவீனமாக நினைக்கிறான். ஆனால் ராம்ஸே, மரியத்தை மிரட்ட தன் மகனின் தலையில் துப்பாக்கி வைக்கிறான். இது ஒன்றும் வேலு, தனலெட்சுமி கழுத்தில் கத்தி வைப்பது போல சும்மா மிரட்டுவதற்கு அல்ல, ராம்ஸே சுட தயங்க மாட்டான். மரியம் ஆவி பக்கத்தில் இல்லாத போதும் கூட மகனின் தலையில் வைத்த துப்பாக்கியை எடுக்காமல் வைத்திருப்பதே அதற்கு ஒரு சான்று. அது அவன் பயப்படுவதால் அல்ல, அவனுக்கு அதுதான் சௌகரியம்.
அவனுக்கு பயமே இல்லை என்பதை முதலில் இருந்தே பார்க்கலாம். அவனின் மாமனாரிடம் பயப்படுவது போல நடிப்பது கூட அவனால் முடியவில்லை. சாத்தான் தான் உயர்ந்தவன், அந்த எண்ணத்தை உடைக்குமாறு ஏதேனும் நடந்தால்? அதனால் தான் மாமனாரிடம் பணிந்து/பயந்து பேசும்போது காட்டப்படும் காட்சியில் சாத்தான் ஒன்று திணறுவதைப் போலக் காட்டப்படும்.
மரியம் ஆவியாக வந்து விட்டபோது, மனைவிக்கு உண்மை தெரிந்த போது, மனைவியின் உடலுக்குள் மரியம் ஆவி புகுந்த பின்னர், கடவுள் தான் எதிரில் நிற்பது என தெரிந்த பின்னர் கூட பயம் என்பது அவனுக்கு ஏற்படவே இல்லை. பயம் என்ற உணர்ச்சியே அவனிடத்தில் அமையப்பெறவில்லை.
அனிதா பாண்டியன், நந்த கோபாலன் குமரன், ராம்ஸே இவை மூன்றும் செல்வகராகவனின் எழுத்தில் இருந்து வெளி வந்த எனக்கு தெரிந்த தீய கதாப்பாத்திரங்கள். நந்த கோபாலனுக்கும், அனிதாவுக்கும் தீமை செய்ய காரணம் உள்ளது. ‘ஏன் அப்படி செய்தோம்?’ என அவர்களால் வக்காலத்து வாங்க முடியும். ஆனால் ராம்ஸேக்கு அந்த அவசியமே இல்லை. இதில் ஒரு தனித்தன்மை என்னவென்றால் அவன் பிறப்பு ரகசியம். அவனுக்கு அப்பா, அம்மா சொந்தம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதுவும் ‘சாக்கடையில்' பிறந்ததாக் குறிப்பிடுகிறான். அவன் சாத்தானாகவே பூமிக்கு வந்தவன்.
இப்படி ஒரு கதாப்பாத்திரம் நம் சினிமாவில் காட்டப்பட்டது செல்வராகவனின் சோதனை முயற்சி. அதனால் இந்த கதாப்பாத்திரத்தை அவண்ட் கார்ட் (Avante Garde - New and experimental ideas and methods in art, music, or literatur) ஆக நினைக்கிறேன். இந்தப்படத்திற்கு பின்னர் NGK வந்திருந்தால் கண்டிப்பாக இவ்வளவு விமர்சனத்திற்கு ஆளாகியிருக்காது. இரண்டு படங்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கதை சொல்லும் விதம் கையாளப்பட்டிருக்கிறது. ஆடியன்ஸ் தாங்களாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை இந்த விதமான படமாக்கலுக்கு தொடக்கமாகவும் அதன் வெற்றிகரமான நீட்சியாக NGK உம் அமைந்திருக்க வேண்டும்.
தாமதமான ரிலீஸ் ரெண்டு படங்களின் வணிக ரீதியான வெற்றியையும் பாதித்து விட்டது, ஆனால் வீச்சு பாதிக்கப்படவில்லை.
Comments