top of page

13 Minutes to the Moon 🚀 🌔 [Podcast]


நிலவுக்கு மனிதன் சென்றது பொய். அமெரிக்கர்கள் ரஷ்யர்களைத் தோற்கடிக்க கையாளப்பட்ட உத்தி என வதந்திகள் உலவுகிறது. நானும் ஏறத்தாழ நம்பத்தொடங்கினேன். ஆனால் இதைப் பற்றி கொஞ்சோண்டு Google இல் தேடிய போது 10 நிமிடத்தில் உண்மை விளங்கி விட்டது.


மனிதன் வாமன அவதாரம் எடுக்காமலே முழு பூமியையும் தூரத்தில் இருந்து கண்களால் அளந்து, லட்சம் கிலோமீட்டர்கள் கடந்து, அந்தப் பக்கத்துக் கோளில் காலை வைத்து சாதித்தான். இது அறிவியலுக்கு மட்டுமல்ல, மனித இனத்திற்கே மிகப்பெரிய காலடி.


இச்சாதனையின் பிண்னனி என்ன? இதில் வெற்றியடைய எத்தனை தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது? ஈடுபட்டவர்களின் உழைப்பும், தியாகமும் என்னென்ன? இவற்றையெல்லாம் சேர்த்து இறுதியாக, நிலவில் தரையிறங்கும் அந்த 13 நிமிடங்களில் குழுவினர் சந்தித்த பிரச்சனைகள் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? என்பதையெல்லாம் சலிப்புத்தட்டாத வகையில் முன்னும் பின்னுமாகக் கோர்த்து கொடுத்திருக்கிறது BBC. இசையமைத்தது Hans Zimmer. சரியான இடங்களில் இசை மூலம் Goosebumps ஏற்படுத்தி, முதல்முறை ஒரு பாட்கேஸ்ட்டை திரும்பத் திரும்பக் கேட்க வைத்து விட்டார்.


கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தலைப்பாக, முதல் நிலவுப் பயணத்தை நான் பரிந்துரைக்க காரணம், மனிதன் தன்னை வலிமை படைத்தவன் என நிரூபிக்க, பரிணாம வரலாற்றில் எந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறான் என்றும், கட்டுக்கதைகளால் உருவாக்கப்பட்ட சில கலாச்சார நம்பிக்கைகளை உடைக்க அறிவியல் முன்னெடுப்புகளின் பங்கு எவ்வளவு முக்கியம் என்றும் புரிந்துகொள்ளவே.


எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மனதுக்கு நெருக்கமான ஒரு தொகுப்பு இது. ஆரம்பத்தில் ஆர்வப்படுத்தியது, பின்னர் ஊக்கப்படுத்தியது, கடைசியாக பெருமையடைய வைத்தது.

தமிழ் நாட்டில் நடந்தால் தமிழனுக்கு பெருமை, இந்தியாவில் என்றால் இந்தியனுக்கு, இது பூமியைத் தாண்டி நடந்ததால் எந்தச் சமுதாயத்திற்கும் உட்படாமல் மனித இனத்திற்கே பெருமை உண்டாக்கியதாக தோன்றியது. இந்த சாதனையால் யாருக்குமே சிறுமை இல்லை (ரஷ்யர்கள் உள்பட). வேண்டுமானால் பரிணாம வளர்ச்சியில் நம்மால் தோற்கடிக்கப்பட்ட மிருகங்களும், மற்ற கிரகங்களில் நம்மைவிட அறிவில் பின் தங்கிய ஏலியன்களும் வயித்தெரிச்சல் பட்டுக் கொள்ளலாம்.


பல தோல்விகளுக்குப் பிறகு, கடைசியாக Apollo 11 நிலவைச் சென்றடைந்தது. இது தான் Season 1. அதன் பின்னர் Apollo 13 இன் பயணக் கதையை Season 2 ஆக வெளியானது.

நிலவுப்பயணம் பற்றி ஏராளமான டாக்குமெண்டரிகள் இலவசமாகவும், Nat Geo மற்றும் Discovery போன்ற தளங்களிலும் கிடைக்கின்றன, அது போக படங்களும் வெளியாகியுள்ளன. உங்களுக்கு எது வசதியோ அதில் இருந்து தொடங்கலாம். ஆனால் முதன்முதலாக பாட்கேஸ்ட் கேட்கத் தொடங்குவதாக இருந்தால் இது சரியானத் தேர்வு.

கடைசியாக ஒன்று,

நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை மட்டும் கொண்டாடிய உலகம், மைக்கில் காலின்ஸ்க்கு ஏற்ற இடத்தை கொடுக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. உலகத்தின் உச்சக்கட்ட தனிமையை சந்தித்த முதல் மனிதன் இவர்தான். இத்தொடரைக் கேட்டு முடித்ததும் ஏன் என்று தெரியும். கடந்த ஏப்ரல் மாதம்தான் இறந்து போனார்.To the moooon...🚀🌔


BBC தளத்திலேயே டவுன்லோட் செய்ய: https://www.bbc.co.uk/programmes/w3csz4dj

21 views0 comments

Comments


bottom of page