"போன்ல எல்லா நம்பரும் அழிஞ்சு போச்சுல...உன் நம்பர் தான் நியாபகம் இருந்துச்சு. பயலுக நம்பர்லாம் அனுப்பி விடு"
"சேரிட்டி ட்ரஸ்ட்காரங்க காசு கேட்டு பாடா படுத்துனாங்க மாரி. உங்களால முடியலனாலும் உங்க ப்ரெண்ட்ஸ் நம்பர் குடுங்கன்னு கேட்டாங்க. எனக்கு உன் நம்பர் தான் முதல்ல தோணுச்சு, குடுத்துட்டேன்"
இப்படி ஏகப்பட்ட நிகழ்வுகள். ஏனென்றால் மிகவும் சுலபமான நம்பர். எளிதில் எல்லோருக்கும் மனப்பாடம் ஆகி விடும். என்னைப் பற்றி நினைக்கும் போது என் நண்பர்களுக்கு எனது நம்பர் நியாபகம் வருவது போல, கூடவே எனக்கு நியாபகம் வரும் ஒருவன்.
ஜாக்கி!
உண்மையில் நான் வைத்திருப்பது என்னுடைய பெயரில் வாங்கிய சிம் கார்டு அல்ல. 6 வருடம் கழித்து பெங்களூரு சென்று கர்நாடகா வட்டத்திற்கு மாற்றும்போது தான் எனது ஆதாரத்தின் கீழ் மாற்றினேன்.
11ம் வகுப்பு படிக்கும் போது 2010ல் புதுப்புது சிம் கார்டுகளின் வரவு அதிகமாக இருந்தது. Tata Docomo, Uninor, Videocon மற்றும் Hutch ஐ Vodafone வங்கியது. புது சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கும். ஆதாரத்தைக் கொடுத்தால் மட்டும் போதும். மார்க்கெட்டைப் பிடிக்க அவ்வளவு போட்டி. ஆனால் தற்போது மாதிரி ரீசார்ஜ் எல்லாம் அவ்வளவு மலிவு கிடையாது. சிம் கார்டில் காசு தீர்ந்ததும் ரீசார்ஜ் பண்ண மாட்டேன், புது சிம் கார்டு வாங்கி விடுவேன், அதுவும் ஆதாரம் இல்லாமல். ஆனால் ஒரு ஆதாரத்தின் கீழ் இத்தனை சிம் கார்டுகள் தான் இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. இதெற்கெல்லாம் ஒரு தீர்வு தரத்தான் ஜாக்கி வந்தான்.
ஜாக்கியை எவனோ ஒரு நண்பன் தான் அறிமுகப்படுத்தினான். அந்தோணியார் சர்ச்/சிவன் கோவில் தெருவில் அவன் வீடு. ஜாக்கி என்னை விட 4 அல்லது 5 வயது அதிகமாக இருக்கலாம். ஒல்லியாக, சீவாத தலையுடன் எப்போதும் ஒரே டீ-சர்ட் மற்றும் ட்ராக் பேண்ட் அணிந்திருப்பான். ஏனோ அவனை நினைத்தால் Brown நிறம் நியாபகம் வரும். அவன் வீட்டில் அவனைத்தவிர யாருமே இருந்து நான் பார்த்ததில்லை. கால் சென்டரில் வேலை செய்ததாக கூறினான். அவன் வீடு முழுக்க சிம் கார்டுகள் குவிந்து கிடக்கும். கட்டுக்கட்டாக ரப்பர் பேண்ட் போட்ட வெவ்வேறு வண்ணங்களில் சிம் கார்டு கவர்களை கையில் கொடுப்பான்.
'நம்பர் பாத்து எது வேணுமோ எடுத்துக்கோ...40 ரூவா'
நான் குத்து மதிப்பாகத் தான் எடுப்பேன். Uninor மற்றும் Videocon தான் எனது விருப்பம். அவை மிகவும் புது வரவு. எனது வட்டத்தில் வேறு யாரிடமும் அது இருக்காது (ஒரு பந்தா!). சும்மா 'காசு இருக்கே' என்று பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பனிடம் கால் பண்ணி பேசியிருக்கிறேன். அந்த அளவுக்கு எக்கச்சக்க சிம் கார்டுகள் வாங்கி குவித்திருக்கிறேன். நண்பன் ரதீஷ் வீட்டுக்குப் பக்கத்தில் தான் ஜாக்கி வீடு. அதனால் அடிக்கடி அவன் வீட்டுக்கு போவேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஜாக்கி தினமும் சேமியா உப்புமா தான் செய்து சாப்பிடுவான். தோசை, இட்லி, பூரி என எதையும் சாப்பிட மாட்டான். பெரும்பாலும் மாலை 7 மணிக்கு பின்னர் தான் செல்வேன். எப்போது சென்றாலும் சமையலறையில் நின்று கொண்டு சேமியா கிண்டிக் கொண்டிருப்பான். இல்லையெனில் டிவி பார்த்துக் கொண்டே சேமியா சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.
Unbelievable!
சேமியா உப்புமா என்றால் எனக்கு வேப்பிலை கசாயம். ரொம்பவும் கஷ்டப்பட்ட சிறு வயது காலங்களில் பெரும்பாலும் காலை உணவு இதுவாகத்தான் இருக்கும். மீனா சித்தி வீட்டில் காலை சாப்பாடு பெரும்பாலும் இதுதான். எனவே அதன் மீது ஒரு சலிப்பு ஏற்பட்டு, மெல்ல மெல்ல வெறுப்பாகவும் மாறி விட்டது. ஆனால் ஜாக்கி எப்படி சலிக்காமல் சாப்பிடுகிறான்?
அப்போது தான் புரிந்தது. எனது வெறுப்பு சேமியா மீது இல்லை, அதைக் கட்டாயமாகச் சாப்பிட வைத்த சூழ்நிலை தான். இப்போதெல்லாம் அம்மா சேமியா செய்வதில்லை. நாங்கள் மேகி சாப்பிடும் பணக்காரர்கள் ஆகி விட்டோம். சேமியாவை மறந்து விட்டோம். ஜாக்கியின் நினைவுகள் நியாபகம் வந்ததும் தான், சேமியாவுக்கு நாங்கள் செய்த துரோகம் நியாபகம் வந்தது.
எத்தனை முறை மளிகைக் கடையில் மேகி வாங்கும்போது, சேமியா என்னைப் பார்த்து 'நல்லாயில்ல நல்லாயில்லன்னு என்னையத் திண்ணு வளத்த உடம்புதான இது, இப்போ துரைக்கு மேகி கேக்குதோ' என்று நினைத்திருக்கும்.
ஆனால் ஜாக்கி இப்போதும் தினமும் சேமியா சாப்பிடுவானா? என்னைப் போல துரோகம் செய்திருப்பானா? உண்மையில் அவன் விருப்பப்பட்டு சாப்பிட்டானா அல்லது செய்ய சுலபமாக இருப்பதால் சாப்பிட்டனா என்று எனக்குத் தெரியாது. ஜாக்கியை நான் கடைசியாகப் பார்த்தது இப்போது நான் வைத்திருக்கும் உலக பேமஸ் போன் நம்பரை வாங்கிய போது தான். ஏனென்றால் அதன் பின்னர் அந்த நம்பரில் இருந்து மட்டுமே கால் செய்ய வேண்டும் என முடிவு செய்து ரீசார்ஜ் பண்ண ஆரம்பித்து விட்டேன், .
அந்த கடைசி ஒரு நாள் வழக்கம் போல, சேமியாத் திண்ணி என்னிடம் சிம் கார்டு கட்டுகளைக் கொடுத்தான். ஆனால் ஏனோ மேஜை மேல் அனாதையாகக் கிடந்த ஒரு Tata Docomo அட்டையில் எனது கவனம் சென்றது. எடுத்துப் பார்த்தேன். அது பிரிக்கப்பட்டிருந்தது. பின்னால் திருப்பி நம்பரைப் பார்தேன் (மெல்லிய காற்று வீசியது, மண்டைக்கு பின்னால் வெளிச்சம், பக்கத்து சர்ச் பெல் அடித்தது).
"ஜாக்கி, இந்த நம்பர் கிடைக்காதா?"
"அது ஏற்கனவே ஒரு ஆள் பேர்ல கிடக்கு... மாத்தனும்"
"சரி அப்போ...எனக்கு மாத்திக் குடுங்க"
"சே...சும்மா இரு. அது கஷ்டம்"
"அப்போ அப்படியே குடுங்க பரவால்ல"
"யார்ட்டயோ இருந்த நம்பரு...எவனாச்சும் கால் பண்ணிட்டே இருப்பான் வேணாம்டா"
"இல்ல ஜாக்கி, எனக்கு இந்த நம்பர்தான் வேணும்"
"சரி...இதுன்னா 200 ரூவா வேணும்"
கண்டிப்பாக சில நொடிகள் யோசித்திருப்பேன்.
எனக்கு சுத்தமாக நியாபகம் இல்லை அந்த 200 ரூபாய் எப்படி ஏற்பாடு செய்தேன் என்று. ஆனல் அவனிடம் வாங்கி விட்டேன். அன்றே வாங்கினேனா? மறு நாள் வாங்கினேனா? கடனாக எடுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப அடைத்தேனா என்றும் நியாபகம் இல்லை.
வாங்கிய புதிதில் அவன் கூறியது போல ஒரே போன் கால்கள், யார் யாரிடமோ இருந்து. பின்னர் அடங்கி விட்டது. 11 வருடங்களாக் இந்த நம்பரை மாற்றாமல் வைத்திருக்கிறேன். ஆனால் 3 நெட்வொர்க்குகள் மாறி விட்டேன். Tata Docomo கடையைச் சாத்தி விட்டார்கள். பின்னர் Airtel, பின்னர் Vodafone கடைசியில் மறுபடி Airtel.
இப்போது திடீரென இவையெல்லாம் ஒரு பேச்சுவாக்கில் நியாபகம் வந்து, Jacky என்று காண்டாக்ட் லிஸ்டில் தேடிப் பார்த்தேன். இன்னும் அவனது நம்பர் என்னிடம் இருக்கிறது. என்னைப் போல அவனும் கண்டிப்பாக அதே நம்பரை வைத்திருப்பானா என்று சந்தேகம். கால் செய்ய ஏனோ தைரியம் இல்லை.
என்றாவது ஒரு நாள் ராத்திரி 8 மணிக்கு மேல் கால் செய்து, ஜாக்கி அதை எடுத்து, "ஓ நீயா? எப்படி இருக்க...ஒரே ஒரு நிமிஷம் இரு, சேமியாவ அடுப்புல இருந்து இறக்கிட்டு பேசுறேன்" அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும். (இவன் இன்னும் திருந்தல மாமா....!)
Comments